குஜராத் முதல்- மந்திரியை மிக மோசமான தலைவர் என்று ராகுல் காந்தி ஒப்பிட்டதால் ஆவேசம் அடைந்த மாணவர்கள் அவருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக, கலந்துரையாடல் நிகழ்ச்சி பாதியில் முடிந்தது.
வருங்கால பிரதமர் என்று காங்கிரஸ் தலைவர்களால் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்தி வருகிறார்.
தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் ராகுல், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்களை சந்தித்து உரையாடி வருகிறார். நரேந்திரமோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்றுவரும் மாநிலமான குஜராத்தில், ராகுல் காந்தி நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நேற்று காலை, ஆமதாபாத்தில் உள்ள தாக்கர்பாய் தேசாய் அரங்கில் மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக, ஆமதாபாத் நகரை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து 700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ராகுல், ஒரு கட்டத்தில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை, சீனாவின் மாசேதுங் போன்ற `மிக மோசமான தலைவர்' என்று விமர்சித்தார். ராகுலின் இந்த பதில் சில மாணவர்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியது.
அந்த மாணவர்கள் ராகுலுடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "கோத்ரா கலவரம் நடந்தபோது உள்ள நிலை தற்போது இல்லை. எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்து மேம்பட்ட நிலையில் குஜராத் மாநிலம் உள்ளது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
"மோசமான பல தலைவர்கள் இதுபோல் வளர்ச்சிப்பணிகளை செய்து இருக்கிறார்கள். நரேந்திரமோடி எவ்வளவுதான் நல்ல திட்டங்களை நிறைவேற்றினாலும், `கோத்ரா' கலவரத்தின்போது அவர் மீது படிந்த கறை விலகாது'' என்று ராகுல் பதிலடி கொடுத்தார்.
மாணவர்களும் விடாமல், "வாரிசு அரசியல் மூலம்தானே நீங்கள் கட்சியில் அதிகாரம் செலுத்தும் நிலைக்கு வந்து இருக்கிறீர்கள்? அப்படி இருக்கும்போது, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தை கொண்டு வர நீங்கள் முயற்சிப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?'' என்று கேள்விக்கணை தொடுத்தனர்.
அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை சூசகமாக உணர்த்தி, "வாரிசு அரசியலை மாற்ற முயன்ற எனது தந்தைதான் எனது `ரோல் மாடல்' தலைவர். காங்கிரசில் இந்த பொறுப்புக்கு வருவதற்காக நான் கொடுத்துள்ள விலை அதிகம்'' என்று குறிப்பிட்டார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி சூடாக மாறத் தொடங்கியதால், அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாக முடித்துக்கொள்ள முயன்றனர். சில மாணவர்களிடம் இருந்து `மைக்'குகளும் பறிக்கப்பட்டன. ராகுல் காந்தியும், மேற்கொண்டு மாணவர்களுடன் விவாதத்தை தவிர்த்து அவசரமாக வெளியேறினார்.
இதனால் மாணவர்களின் கலந்துரையாடல் பாதியிலேயே முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்காக, காலை 8.30 மணிக்கே மாணவர்கள் அனைவரும் அரங்கில் கூடி இருந்தனர். ஆனால் விமானம் தாமதமாக வந்ததால், 11 மணிக்குத்தான் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.